உள்ளூர் செய்திகள்
பஸ்நிலையம் அருகே தங்கும் விடுதியில் தொழிலாளி மர்ம மரணம்

உளுந்தூர்பேட்டை பஸ்நிலையம் அருகே தங்கும் விடுதியில் தொழிலாளி மர்ம மரணம்

Published On 2022-05-09 17:49 IST   |   Update On 2022-05-09 17:49:00 IST
தங்கும் விடுதியில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). தச்சு தொழிலாளி.

இவர் தனது நண்பரான காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடன் வேலைக்காக விருத்தாசலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். வார விடுமுறை முடிந்து பலர் சென்னைக்கு சென்றதால் அனைத்து பஸ்களும் கூட்டமாக இருந்தது.

எனவே அன்பழகன், சரவணன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் காலையில் சரவணன் சென்னைக்கு கிளம்புவதற்காக எழுந்து பார்த்தார். அப்போது அன்பழகன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பலமுறை எழுப்பியும் அவர் கண் விழிகாததால் அச்சமடைந்த சரவணன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அன்பழகனை சோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தங்கும் விடுதியில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர் இயற்கை மரணம் அடைந்தாரா அல்லது அவர் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News