உள்ளூர் செய்திகள்
மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் லாரி ஏறி பலி
மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் மீது லாரி ஏறியதால் பலியானார்.
ஈரோடு:
மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் மீது லாரி ஏறியதால் பலியானார்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக கரூர், மதுரை திருச்சி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
தினமும் நூற்று க்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
இங்கு எப்போதும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் நுழைவு பாலம் வழியாக செல்லும் சாலையில் ரோடுகள் குண்டும் குழியுமாக தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மொபட்டில் காளைமாடு சிலையை தாண்டி ரெயில்வே நுழைவு பாலம் கீழே உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது குண்டும், குழியுமான சாலையால் நிலைகுலைந்த அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இந்த விபத்தை கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்ணைக் கொண்டு அவர் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மோசமான சாலையால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உடனே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.