உள்ளூர் செய்திகள்
வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
காய்கறி வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது.
ஈரோடு:
காய்கறி வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது.
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டுக்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன.
சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகள் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ.10 முதல் 15 விலை குறைந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து குறைவாக வருவதால் தக்காளி விலை மட்டும் ஏறுமுகமாகவே உள்ளது. ஈரோடு மார்க்கெட்டிற்கு தாளவாடி சத்தியமங்கலம், கர்நாடகா மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து முன்பு 10 டன் வரை தக்காளி வரத்தாகி வந்தது.
ஆனால் சமீப காலமாக தொடர்ந்து வரத்து குறைந்து வருகிறது. இன்று வ .உ. சி . மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 டன் தக்காளி வரத்தாகி இருந்தது. ஆனால் இன்று சில்லரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகி வருகிறது.
தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தாக தொடங்கினால் தக்காளி விலையும் சரியும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கத்தரிக்காய், பீட்ரூட் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்துள்ளது.
இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய்-40, முள்ளங்கி-30, அவரை க்காய்-60, பீர்க்கங்காய்-60, பாகற்காய்-50, வெண்டைக்காய் - 40, பீட்ரூட்-40, பீன்ஸ்-60, புடலங்காய்-40, முருங்கைக்காய்-40, முட்டைக்கோஸ்-ரூ.10 முதல் 20 வரை, காலிபிளவர் -20, மிளகாய்-40, சின்ன வெங்காயம்-20, பெரிய வெங்காயம் - 20.