உள்ளூர் செய்திகள்
மாணவி

கட்டாய திருமணத்தால் விரக்தி- 16 வயது மாணவியுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்ற வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2022-05-08 11:42 IST   |   Update On 2022-05-08 11:42:00 IST
16 வயது மாணவியுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்ற வாலிபர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து காசுகளை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் விக்னேஷ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாரியங்கால் கிராமத்தை சேர்ந்த அத்தை மகள் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதற்கிடையே விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த கலா (16) என்ற பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் விக்னேஷ், அந்த மாணவியுடன் தனது காதலை தொடர்ந்து வருகிறார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்தும் விக்னேஷ் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் மாணவி கலாவை, விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வழியில் தேனி மாவட்டம் குமுளி அருகே சோதனைச்சாவடியில் பணியில் இருந்த கேரள மாநில போலீசார் விக்னேசை தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர்.

அப்போது, தான் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், விக்னேஷ் தன்னிடம் இருந்த சில்லறை காசுகளை திடீரென்று வாயில் போட்டு விழுங்கினர். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக அவரை மீட்டு குமுளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெற்றோர் தனது விருப்பத்திற்கு மாறாக தனக்கு அத்தை மகளை திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், ஆனால் மாணவியும், காதலியுமான கலாவையே தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து குமுளி போலீசார், மாணவி கலா மற்றும் விக்னேஷ் ஆகியோரை செந்துறை போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து செந்துறை போலீசார் வாலிபரை தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கே கொடுக்கப்பட்ட சிகிச்சையில் விக்னேஷ் விழுங்கியதில் 2 காசுகள் மட்டுமே வெளியே வந்தது. மேலும் 8 காசுகள் வெளியே வராத நிலையில் வாலிபரை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அந்த வாலிபரை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News