உள்ளூர் செய்திகள்
விஷம்

குடும்ப தகராறில் விஷ மாத்திரை தின்று வடமாநில இளம்பெண் தற்கொலை

Update: 2022-05-03 06:42 GMT
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் விஷமாத்திரை தின்று வடமாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:

ஒடிசா மாநிலம் கோத்ரா மாவட்டம் தேவுளி பகுதியை சேர்ந்தவர் புட்டுரன் ஜன்தாஸ் (28). இவரது மனைவி லிப்டிமாயிபேரா (24). இவர்களது மகள் சாய்ஸ்மிரிதாஸ் (5). இவர்கள் ஈரோடு மாவட்டம் நஞ்சைஊத்துக்குளி சாவடிபாளையம் பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

புட்டுரன் ஜன்தாஸ் நேற்று மதியம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது சாப்பாடு செய்யாததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

கணவர் கோபமாக பேசியதால் மனம் உடைந்த லிப்டிமாயிபேரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் தான் மட்டும் இறந்து விட்டால் மகள் அனாதையாகி விடுவாள் என கருதி மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து லிப்டிமாயிபேரா தனது மகள் சாய்ஸ்மிரிதாசுடன் விஷ மாத்திரை தின்று மயங்கினார். இதுபற்றி தெரிய வந்ததும் புட்டுரன் ஜன்தாஸ் வீட்டிற்கு அலறி அடித்து கொண்டு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரையும் மீட்டு மொடக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிப்டிமாயிபேரா பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது மகள் சாய்ஸ்மிரிதாஸ் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News