உள்ளூர் செய்திகள்
ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லையென்று 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-05-02 09:52 GMT   |   Update On 2022-05-02 09:52 GMT
திருவண்ணாமலை அருகே கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லையென்று 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று நல்லவன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள் தண்டராம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இந்த சாலை மறியல் போராட்டம் 1 ½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. 

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் தலைமை யிலான அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், கிராம கூட்டம் குறித்து முறையாக அறிவிக்க வில்லை. இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக செய்து கொடுக்கவில்லை. வரவு- செலவு கணக்கு முறையாக வழங்க வில்லை என்று கூறினர். அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் திருவண்ணாமலை அடுத்த சானானந்தல் பகுதியிலும் கிராம சபை கூட்டத்திற்கு முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பழைய சானானந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என்று தண்டோரா போடப்பட்டது. ஆனால் அதில் எங்கு கூட்டம் நடைபெற உள்ளது முறையாக தெரிவிக்கப்படவில்லை. வழக்கமாக ஊராட்சி மன்ற அலுவலக முன்பு தான் கூட்டம் நடைபெறும். அதனால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காத்திருந்தும் எந்த பயணும் இல்லை என்றனர். 

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, ஊராட்சி உட்பட்ட குறிப்பிட்ட 4 இடங்களில் எங்கு வேண்டும் என்றாலும் கூட்டம் நடத்தலாம். இது குறித்து முறையாக தண்டோரா போட்டப்பட்டு உள்ளது. 

அதன்படி கூட்டம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றனர்.

இதற்கிடையில் போராட்டம் குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது போலீசார் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அல்லது அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளியுங்கள் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News