உள்ளூர் செய்திகள்
ஒற்றை யானை

பவானிசாகர் அணை அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம்

Published On 2022-04-27 09:23 IST   |   Update On 2022-04-27 09:23:00 IST
பவானிசாகர் அணை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் போதிய மழையின்றி வெயில் கொளுத்துவதால் மரம், செடி, கொடிகள் காய்ந்து, நீர் நிலைகள், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.

இதனால் வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக யானைக்கூட்டம் பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் குட்டிகளுடன் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை கடந்து தண்ணீர் குடிக்க செல்கின்றன.

இந்நிலையில் பவானிசாகர் அணை அருகே வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள புங்கார் பழத்தோட்ட நுழைவு வாயில் அருகே சுற்றித் திரிந்தது. ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் புங்கார் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானை கூட்டம் பவானிசாகர் அணை மற்றும் கரைப்பகுதியை கடந்து தண்ணீர் குடிக்க செல்கிறது. மேலும் ஒற்றை யானை ஒன்றும் தனியாக சுற்றித்திரிந்து வருகிறது.

எனவே அந்தப் பகுதியில் கால்நடை மேய்ப்போர், பவானிசாகர் அணை அருகே மீன்பிடிக்க செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News