உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு வரை காத்துக்கிடந்த பொதுமக்கள்
திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு வரை காத்துக்கிடந்த பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று இரண்டு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து முகூர்த்த நாள் என்பதால் வீடு வாங்கவும் விற்கவும், வீட்டுமனை வாங்க விற்பது சம்பந்தமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
பத்திர பதிவு காலை முதல் மந்தநிலையில் சென்றதால் கூட்டம் அதிகரித்து கொண்டு இருந்தது.
மாலை 3 மணி பிறகு பத்திரப் பதிவு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன சுமார் 30&க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு செய்யப்படாமல் சுமார் இரவு 7 மணி வரையும் காக்க வைத்துவிட்டு மறுநாள் காலை 10 மணிக்கு மேல் வாருங்கள் என பாத்திரத்தை திருப்பிக் கொடுத்தனர்.
இதனால் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு காத்துக்கிடந்தவர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலரிடம் கேட்டபோது நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் பத்திர பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் ஒருநாளில் 100-க்கும் மேற்பட்ட பத்திர பதிவு செய்யப்பட்டு வரும் இந்த அலுவலகத்தில் நெட்வொர்க் பிரச்னை என்று கூறுவது மிகவும் வேதனையாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.