உள்ளூர் செய்திகள்
வி‌ஷம்

பவானிசாகர் அருகே கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பலி

Published On 2022-04-25 10:08 IST   |   Update On 2022-04-25 10:08:00 IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ராசபட்டி, கே.கே.வலசு பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (30). இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(36) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் முத்துலட்சுமியின் தம்பி மணிகண்டனின் மனைவி சுகந்திக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தினேஷ்குமாருக்கு சுகந்தி தங்கை உறவு முறையாகும். உறவுமுறை மீறிய இந்த பழக்கத்தை கேள்விப்பட்டு முத்துலட்சுமி தனது கணவர் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். அதேபோல் மணிகண்டனும் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கும் அறிவுரை கூறியும், புத்திமதியும் உறவினர்கள் கூறினார்கள்.

ஆனால் இதனை ஏற்க மறுத்து கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார், சுகந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், சுகந்தி காணாமல் போய் விட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய தினேஷ் குமார், சுகந்தியை அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தார்.

அவர்களை தினேஷ்குமாரின் பெற்றோர் ஏற்க மறுத்து கண்டித்து வெளியே அனுப்பி விட்டனர். இதனால் தினேஷ்குமார் கோபியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சுகந்தியை அழைத்துக் கொண்டு பவானிசாகர் வந்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள கருப்பராயன் கோவில் அருகே வி‌ஷம் குடித்தனர்.

பின்னர் திடீரென தினேஷ்குமார் மோட்டார்சைக்கிளில் சுகந்தியை அழைத்துக் கொண்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அவர் தாங்கள் 2 பேரும் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மேல் சிகிச்சைக்காக தினேஷ் குமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சுகந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News