உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு
அம்மாபேட்டை அருகே இரு கிராமங்களுக்கு செல்லும் சாலையை அடைத்து பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே இரு கிராமங்களுக்கு செல்லும் சாலையை அடைத்து பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் காடப் பநல்லூர் ஊராட்சியில் முத்துகவுண்டன் புதூர், பரசுராமன் காட்டூர் என இரு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இக்கிராம மக்கள் 40 வருடங்களுக்கு மேலாக 17 அடி அகலமுள்ள மேட்டூர் மேற்குக்கரை கிளை வாய்க்கால் வழியாக உள்ள சாலையில் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழித்தடம் தனியாருக்கு சொந்தமான நிலம் என கூறி 40 அடி நீளத்துக்கு அப்பாதையை வெட்டி ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டதால் பொது மக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப் பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை நடத்தினர். கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆவணங் களின் அடிப்படையில் மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த மார்ச் மாதம் 14&ந் தேதி துண்டிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரு கிராமங்களுக்கு செல்ல சாலை அமைக்கப் பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே மீண்டும் கற்கள், மரக்கட்டை களை அடுக்கி வைத்து தடை ஏற்படுத்தினர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பவானி போலீஸ் நிலையத் தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.