எதிர்கட்சிகளின் ஆட்சிமாற்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது- கவர்னர் தமிழிசை பேட்டி
புதுச்சேரி:
புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசை கவர்னர் தமிழிசை மூலமாக மாற்ற பா.ஜனதாவினர் சதி செய்வதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார். இந்த நிலையில் கவர்னர் தமிழிசை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஓட்டல் ஆனந்தா இன்னில் நடந்த தென்னிந்திய வணிக மற்றும் தொழில்அவை சார்பில் நடந்த மாநாட்டை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை புதுவை வளர்ச்சிக்கு மைல்கல்லாக இருக்கும். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஏற்கனவே பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் புதுவையின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பக்கபலமாக உள்ளனர்.
இதனால் அமித்ஷாவின் வருகையை புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கான வருகையாக பார்க்க வேண்டும். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில வளர்ச்சிக்கே எதிர்ப்பு தெரிவிப்பது போலாகும்.
அதோடு புதுவையில் ஆன்மிக பணிக்கு நீண்டகாலமாக சேவை செய்த அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
கொரோனா 4-வது அலை பரவல் தொடர்பாக மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேச உள்ளேன். அனைவரும் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவல் இல்லை என்பதால் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தினோம்.
இப்போது அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டதால்தான் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டது. தேவைப்பட்டால் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
எதிர்கட்சிகளின் ஆட்சி மாற்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆக்கப்பூர்வமான கோப்புகளுக்கு நான் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறேன். கவர்னர் மாளிகையில் என்ன நடக்கிறது? என யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
ஆன்மிகம் மற்றும் சுற்றுலாவுக்கு புதுவை தாய் பூமியாக உள்ளது. பெஸ்ட் புதுவையாக மாற்ற பிரதமர் அறிவித்துள்ளார். அதற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருகிறோம்.
கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரத்தையும், நாட்டையும் மீட்டெடுக்க பிரதமர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
கொரோனா தொடக்க காலத்தில் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய நிலையில் இருந்தோம். ஆனால் பின்னர் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளோம். வெளி நாட்டுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறோம்.
புதுவையில் தொழில் தொடங்க வருவோருக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். புதுவையில் தொழில் முனைவோர் தொழில்களை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.