உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு
ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த கே.கே. நகர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த கே.கே. நகர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அரச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக இன்று காலை ஈரோடு பஸ் நிலையம் நோக்கி டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பஸ்சை ஈரோட்டை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் அந்த பஸ் ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த கே.கே. நகர் பஸ் நிறுத்தத்தில் நின்றது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 50) என்ற பெண் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் படிக்கட்டின் அருகே நின்று பயணம் மேற்கொண்டார்.
அப்போது கே.கே. நகர் தாண்டி பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
நல்ல வேளையாக பஸ் மெதுவாக சென்றதால் அவருக்கு முகம் மற்றும் கைகளில் மட்டும் அடிபட்டது. மேலும் அவர் கீழே விழுந்தபோது பின்னால் எந்த ஒரு வாகனமும் வரவில்லை.
இதனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். பஸ்சில் இருந்து பெண் கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி அந்த பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வள்ளியம்மாளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இன்று காலை அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.