உள்ளூர் செய்திகள்
இளையராஜா மீதான வரம்பு மீறிய தாக்கு ஏற்புடையதல்ல
இளையராஜா மீதான வரம்பு மீறிய தாக்கு ஏற்புடையதல்ல என்று அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.
இந்தப் புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடை சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என குறிப்பிட்டிருந்தார்.
இது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. அவருடைய கருத்து உங்களுடைய கருத்தோடு ஒத்திருக்க வேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அதே நேரம் அதை விமர்ச்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
அனால் விமர்சனம் என்ற பெயரில் கடந்த இரண்டு நாட்களாக இளையராஜா மீது தொடுக்கப்பட்டிருக்கும் சாதீய வன்மம் கண்டனத்துக்குரியது. இதை அம்பேத்கர் மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. அரசியல் ரீதியாக அவர் வைத்த கருத்து என்பது அவரது உரிமை. இங்கு எப்படி பெரியாரை, அண்ணாவை, காமராஜரை, கருணாநிதியை புகழ ஒருவருக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதேபோல் மோடியையும் புகழ ஒருவருக்கு உரிமை உண்டு. அது அவரது தனிப்பட்ட பார்வை.
அதற்காக கடந்த வாரம்வரை கொண்டாடப்பட்ட இளையராஜாவை இந்த வாரம் வரம்பு மீறி விமர்சிப்பது எந்தவிதத்திலும் அறமாகாது. முக்கியமாக இளையராஜா பதவிக்கு ஆசைப்பட்டுதான் மோடியை புகழ்ந்திருக்கிறார் என்று கூறுவதெல்லாம் அறிவிலித்தனம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அவர் தமிழ்நாட்டின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இதுவரை அவர் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதாக ஒரு தகவல்கூட கிடையாது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியேகூட மோடியை புகழ்ந்திருக்கிறார். பா.ஜ.க.வுடன் கூட்டணியும் வைத்திருக்கிறார். கமல்ஹாசன் எத்தனையோ முறை நடுநிலை என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத பல கருத்துக்களை கூறியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் ஏன் இவ்வளவு பூதாகரமாக மாறவில்லை. இளையராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்.
அவர் மோடியை புகழவேக்கூடாது என்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம். இளையராஜா மீது தாக்குதல் நடத்துபவர்களில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் சிலரின் தாக்குதல் வரம்பு மீறி சென்றுவிட்டது. திராவிடமும், பெரியாரும் இல்லையென்றால் இளையராஜா இசையமைக்கவே வந்திருக்க முடியாது.
சாவு வீட்டில் மோளம் அடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகள் உலாவுகின்றன. சமூக வலைதளங்களில் பலர் அடிப்படைவாதிகளாகவே இருக்கின்றனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். வன்மத்திற்கும், வன்முறைக்கும் இடம் தராதீர்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.