உள்ளூர் செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-20 09:22 GMT   |   Update On 2022-04-20 09:22 GMT
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் பங்கேற்றார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெறும்.

புதுவை, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து  ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வருவது வழக்கம். விழுப்புரம் கூவாகத்தில் நடப்பது போன்று திருநங்கைகளுக்கான அழகிப்-போட்டியும் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்பு கூத்தாண்டவர் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது. 

திருத்தேர் உற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் சாமி திருக்கல்யாணம், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. 

திருநங்கைகளும் புதிய உடைகள், அணிகலன்களை அணிந்து பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டனர். தொடர்ந்து மிஸ் பிள்ளையார்குப்பம் அழகிப்போட்டி நடந்தது. திருநங்கைகளுக்கு பேஷன் ஷோ, நடனம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.  

இதில் முதல் பரிசை புதுவையை சேர்ந்த கரிஷ்மா பெற்றார். மிஸ் பிள்ளையார்குப்பமாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு புதுவை ஐ.ஜி. சந்திரன் ஒரு பவுன் தங்க காசு வழங்கினார். 2-ம் பரிசு வென்ற புதுவையை சேர்ந்த ஷியமலாதேவிக்கு 4 கிராம் தங்ககாசும்,  3-ம் பரிசு வென்ற புதுவையை சேர்ந்த மெகந்திக்கு 2 கிராம் தங்க காசும், 4-ம் பரிசு வென்ற இந்துவுக்கு 2 கிராம் தங்க காசும், 5-ம் பரிசு வென்ற சென்னையை சேர்ந்த திரிஷாவுக்கு 2 கிராம் தங்க காசும் வழங்கப்பட்டது. 

மேடையில் ஒருமுறை மட்டுமே ஏறியவருக்கு எப்படி முதல் பரிசு கொடுத்தீர்கள்? எனக்கூறி ஒருசில திருநங்கைகள் கூச்ச-லிட்டனர். நேர்மையாக இந்த தேர்வு நடைபெறவில்லை என்றும், ஒருதலை பட்சமாக நடை-பெற்றதாக திருநங்கைகள் கூச்சலிட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று கூத்தாண்டவர் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள், பக்தர்கள். ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அழுகள நிகழ்ச்சியும், அடுத்த மாதம் 5-ந்தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News