உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் குடிபழக்கத்தை மனைவி தட்டிகேட்டதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் குடிபழக்கத்தை மனைவி தட்டிகேட்டதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு எம்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் மகா கிருஷ்ணன் (வயது 42). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகாகிருஷ்ணன் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறப் படுகிறது. கலைச்செல்வி தனது கணவரிடம் குடிப் பழக்கத்தை கைவிடுமாறு பலமுறை சொல்லியும் அவர் கேட்காமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத் தன்று வழக்கம்போல் மகாகிருஷ்ணன் குடித்து கொண்டிருந்தார். இதனை கலைச்செல்வி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகா கிருஷ்ணன் மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றுவிட்டார். கலைச்செல்வியும் கணவர் தூங்க சென்று விட்டார் என நினைத்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த கலைச்செல்வி அறை கதவை தட்டியுள்ளார். அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் எதுவும் வரவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மகாகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகா கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.