உள்ளூர் செய்திகள்
மரணம்

கொடுமுடி காவிரி ஆற்றில் பாறைக்கு வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி பலி

Update: 2022-04-16 07:01 GMT
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை பாறைக்கு வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மன்னதம்பாளையம் காவிரி ஆற்றில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இங்கு சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து குழி தோண்டும் பணி மேற்கொண்டு வருகிறார். அவரிடம் மேட்டூர் பெரியசோரகையை சேர்ந்த அருள் என்பவரது மகன் குமார் (35), மாதையன் என்பவரது மகன் ரவி (26) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை 8.30 மணி அளவில் குமார், ரவி ஆகியோர் வழக்கம்போல் காவிரி ஆற்றில் கம்ப்ர‌ஷர் வாகனங்கள் மூலம் பாறைகளில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்கனவே பாறையில் பழைய குழியில் வைக்கப்பட்டிருந்த வெடிக்காத வெடி ஒன்று திடீரென்று வெடித்து விபத்தானது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த குமார் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ரவி பலத்த காயம் அடைந்தார்.

இதுபற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடி விபத்தில் பலியான குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Tags:    

Similar News