உள்ளூர் செய்திகள்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், மனநிலை சரியில்லாத மூதாட்டி, வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் அபூர்வம்(வயது85). இவரது மகள் மணிமேகலை, மருமகன் நாகப்பன். இவர்களுக்கு திருமணம் ஆனவுடன், திருநள்ளாறு அம்பேத்கார் நகரில் தனியாக வசித்து வருகின்றனர். பேட்டை கிராமத்தில் அபூர்வம் தனியாக வசித்து வந்தார். நாகப்பன் அபூர்வத்திற்கு 3 வேளையும் சாப்பாடு வழங்கிவந்தார். கடந்த சில மாதமாக அபூர்வம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அடிக்கடி காணாமல் போய், மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவது வாடிக்கையாம். இந்நிலையில், கடந்த 14ந் தேதி காலை, நாகப்பன் அபூர்வத்திற்கு உணவு எடுத்து சென்றபோது, அபூர்வம் வீட்டில் இல்லையென கூறப்படுகிறது. மதியம் வந்துவிடுவார் என நாகப்பன் சென்றுவிட்டார்.
மீண்டும் மதிய சாப்பாடு எடுத்துவந்தபோதும், அபூர்வம் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அபூர்வம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று பகல், வீட்டின் அருகே உள்ள நெல்லிவாய்க்காலில், அபூர்வம் இறந்த்நிலையில் மிதப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், நாகப்பன் உடலை பார்த்து, திருநள்ளாறு காவல்நிலையத்தில், அபூர்வம் வாய்க்காலில் இறங்கும் போது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.