உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் கடத்தூர், புளியம்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடத்தூர், புளியம்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்-டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் கஞ்சா விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அரச்சலூர்-நம்பியூர் ரோடு வழியாக ஈ.செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் கரைப்பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திக்கொண்டு 5 நபர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (25), நம்பியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ராஜா (37), ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் (22), ஈ.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த புலி என்கிற ரவீந்திரன் (20), நம்பியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23) என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ரூ.55 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கர்நாடகாவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் புளியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக அந்த பகுதியை சேர்ந்த நடராஜன் (71) என்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக முருகானந்தம் (43) என்பவரை கைது செய்தனர்.