வேப்பூர் அருகே கண்டபங்குறிச்சி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வேப்பூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில், நல்லூர், கண்டபங்குறிச்சி, திருப்பெயர், மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளதால் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அப்பகுதியில் திருட்டு, கஞ்சா விற்பனை, 2 தரப்பினர் மோதல் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது
இதனை தடுக்க சேலம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வேப்பூர் போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து, கண்டபங்குறிச்சி பகுதிக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் புறக்காவல் நிலையம் அமைக்க தேவையான இடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, விருத்தாசலம் ஏ.டி.எஸ்.பி., அங்கித் ஜெயின், மற்றும் வேப்பூர் போலீசார் உடன் இருந்தனர்.