உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு

Published On 2022-03-30 16:22 IST   |   Update On 2022-03-30 16:22:00 IST
மங்கலம்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கலம்பேட்டை:

விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட எடைச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பரசுராமன் (16). இவர் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுப்ரமணியன் வீடு அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைந்துள்ளது.

நேற்று மாலை அங்குள்ள கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது கிணற்றின் அருகே துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பரசுராமன் தண்ணீர் சற்றுக் குறைவாக வந்ததால் கிணற்றுக்குள் எட்டி பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 130 அடி ஆழமுள்ள கிணற்றில் பரசு ராமன் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் பாறைகளின் மீது விழுந்த பரசுராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பரசு ராமனின் அலறல் சத்தம் கேட்ட அவரது தந்தை சுப்ரமணியன் மற்றும் அக்கம் பக்கத்தினர், மங்கலம் பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பரசுராமனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரசுராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News