உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-03-30 15:14 IST   |   Update On 2022-03-30 15:14:00 IST
நாகையில் அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை சட்டயப்பர் மேல வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குடும்ப அட்டை வாங்கி தருவது, சான்றிதழ்கள் வாங்கி தருவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாகை வட்ட வழங்கல் அலுவலர் மாதவனை தொடர்புகொண்டு தான் கொடுக்கும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை விசாரிக்காமல் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் வட்ட வழங்கல் அலுவலர் மாதவன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமாவை தொடர்புகொண்டு, தனியார் டிரஸ்ட் இடத்தை தனி நபருக்கு சட்டத்திற்கு புறம்பாக பட்டா மாறுதல் செய்து கேட்டு, மிரட்டி உள்ளார்.

அதனை தொடர்ந்து நாகை தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகூர் போலீசார் பாஸ்கர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News