உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் தனிப்படை போலீசார்

நாகை அருகே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு - 4 பேர் கைது

Published On 2022-03-29 13:07 IST   |   Update On 2022-03-29 13:07:00 IST
நாகை அருகே 39 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் கடந்த 18-ந்தேதி நகை, பணம் உள்ளிட்டவைகள் திருட்டு போனது.

முருகனின் மனைவி நாகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம கும்பல் 39 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

அதனை தொடர்ந்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகையில் உள்ள பிரபல வெளிநாட்டு கரன்சி மாற்றுபவரிடம் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவன், திருடப்பட்ட வெளிநாட்டு கரன்சியை இந்திய பணமாக மாற்றுவது குறித்து விவரம் கேட்டு சென்றுள்ளான்.

இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கீழ்வேளூர் போலீசார் ஊட்டியில் இருந்த கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நாகை செக்கடி தெரு கொறசேகர், சிவன் தெற்கு வீதி தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்டோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து போலீசாருக்கு பயந்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கொறசேகர், தளபதி காளிதாஸ், ஒச்சு பிரகாஷ் உள்ளிட்ட திருட்டு கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை மீட்டனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட பொருட்களை நாகை எஸ்.பி. ஜவஹர் உரிமையாளரிடம் ஒப்படைத்ததுடன், குற்றவாளிகளை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

Similar News