உள்ளூர் செய்திகள்
கொள்ளை

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை ஆயுதங்களை காட்டி மிரட்டி பொருட்களை பறித்து சென்ற கடற்கொள்ளையர்கள்

Published On 2022-03-28 14:28 IST   |   Update On 2022-03-28 14:28:00 IST
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சிவபாலன், மயில்வாகனன். இருவரும் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மேலும் 10 மீனவர்களுடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை தென் கிழக்கே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை பகுதியை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஒரு விசைப்படகில் வந்து ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர் 2 படகுகளிலும் இருந்த மீனவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி படகுகளில் இருந்த 2 ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள், டார்ச்லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர். செல்போன்களையும் பறித்து சென்றதால் இதுபற்றி அதிகாரிகளுக்கோ, மற்ற மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் மீனவர்கள் 12 பேரும் 2 படகுகளுடன் இன்று காலை நாகை கடற்கரைக்கு திரும்பினர். பின்னர் கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பொருட்களை பறித்து சென்றது குறித்து கடலோர காவல்குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Similar News