உள்ளூர் செய்திகள்
கைது

பவானி கோர்ட்டில் தகாதவார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த நெடுஞ்சாலைதுறை பெண் உதவி பொறியாளர் கைது

Published On 2022-03-25 10:44 IST   |   Update On 2022-03-25 10:44:00 IST
பவானி கோர்ட்டில் தகாதவார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த நெடுஞ்சாலைதுறை பெண் உதவி பொறியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு பாட்டப்பன், குழந்தைவேல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன் தனது 2-வது மகன் குழந்தைவேலுக்கு தனக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை கடந்த 1999-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தார்.

இதையடுத்து சொத்தில் தங்களுக்கும் பங்கு கேட்டு பாட்டப்பன் தரப்பில் பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2013-ம்ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இந்த வழக்கில் குழந்தைவேலுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பாட்டப்பனின் மகள் சந்திரா (55) என்பவர் தனது தந்தைக்கு ஆதரவாக நீதிமன்றத்துக்கு சென்று மனு கொடுத்தார். அந்த மனுக்கள் திருப்பி அனுப்ப பட்டது. ஆனாலும் சந்திரா அடிக்கடி கோர்ட்டுக்கு வந்து ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தகராறு செய்து வந்தார்.

இதே போல் நேற்றும் சந்திரா பவானி கோர்ட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இதைடுத்து பவானி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் சாந்தி என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை கைது செய்தனர். கைதான சந்திரா கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். கைதான சந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News