உள்ளூர் செய்திகள்
நகை

தியாகதுருகத்தில் 741 பேருக்கு நகை கடன் தள்ளுபடி சான்று

Published On 2022-03-24 16:04 IST   |   Update On 2022-03-24 16:04:00 IST
ஆரிய வைசிய கன்னிகாபரமேஸ்வரி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 25 லட்சத்து 89 ஆயிரத்து 59 மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நகை கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மலையரசன், பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணை தலைவர் சங்கர், பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் குப்புசாமி, ஆரிய வைசிய கன்னிகா பரமேஸ்வரி கூட்டுறவு சங்க செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் மூர்த்தி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு அறிவித்த 5 சவரனுக்கு உட்பட்ட தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரத்து 904 மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி 679 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்று மற்றும் அவர்களது நகைகள் வழங்கப்பட்டது.

இதேபோல் ஆரிய வைசிய கன்னிகாபரமேஸ்வரி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 25 லட்சத்து 89 ஆயிரத்து 59 மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 62 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகை வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 741 பேருக்கு கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகை வழங்கப்பட்டது.

அப்போது நகர அவைத்தலைவர் ராதா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சிலம்பரசன், ராஜசேகர், மகாதேவி, ஜெயசித்ரா, உமாமகேஸ்வரி, கோபால், மூக்காயி, கிருஷ்ணவேனி மற்றும் பயனாளிகள் பலரும் உடனிருந்தனர்.

Similar News