உள்ளூர் செய்திகள்
கொலை

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை- சொத்து தகராறு காரணமா?

Published On 2022-03-21 06:02 GMT   |   Update On 2022-03-21 06:02 GMT
கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:

கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 65). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை 9 மணியளவில் அவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது மர்ம கும்பல் திடீரென உமாபதியை வழிமறித்தனர். அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உமாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு உமாபதி தனது சொத்துக்களை மகளின் குழந்தைகளுக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதற்கு உமாபதியின் மகன் சரவணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் உமாபதிக்கும் அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கன்னிவாக்கத்தில் மகனுடன் இருந்த உமாபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயரம்பேடு பகுதியில் உள்ள வீட்டில் பேரன் பேத்திகளோடு தனியாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் உமாபதி வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உமாபதியின் மகன் சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னரே கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து தெரியவரும்.

Tags:    

Similar News