உள்ளூர் செய்திகள்
ஆசிரியையிடம் 9 பவுன் நகை கொள்ளை
அரியலூர் அருகே குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் சரகம், வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். ராணுவ வீரர். இவரது மனைவி மலர்விழி வயது 47. அரசு பள்ளி ஆசிரியர்.
இவர் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மலர்விழியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் மலர்விழி வீட்டிற்குள் சென்றதும், ஒருவர் பின்புறமாக சென்று அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி உள்ளனர்.
மலர்விழி திருடன் திருடன் என சத்தம் போட்டதும் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டியுள்ளனர். சாத்தமங்கலம் அருகே திருடர்கள் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் பழுதாகி விட்டது.
அப்போது பின் தொடர்ந்து வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திருடர்களை பிடிக்க முயலும் போது கத்தியை காட்டி மிரட்டி விட்டு அவர்கள் வந்த வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு திருடர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.
கீழப்பழுவூர் போலீசில் ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.