உள்ளூர் செய்திகள்
மனைவி சாவில் மர்மம்- போலீசில் வியாபாரி புகார்
மனைவி சாவில் மர்மம் இருப்பதாக வியாபாரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்(வயது 47). மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகி பூங்கொடி(42) என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். நடராஜன் வழக்கம்போல் வேலை நிமித்தமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜன், பூங்கொடிக்கு போன் செய்துள்ளார். ஆனால் பூங்கொடி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன் உடனடியாக வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பூங்கொடி தொங்கியதை கண்டு நடராஜன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உடையார்பாளையம் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மனைவி சாவில் மர்மம் உள்ளது. விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து பூங்கொடியின் சாவுக்கான காரணம் என்ன? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.