உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அரசு மருத்துவமனையில் ஓ.பி., சீட்டுக்கு நோயாளிகளிடம் லஞ்சம்

Published On 2022-03-18 16:04 IST   |   Update On 2022-03-18 16:04:00 IST
அரசு மருத்துவமனையில் ஓ.பி., சீட்டுக்கு நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
அரியலூர்:

அரியலூரில் இந்த ஆண்டு ஜனவரியில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இது மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போதைய நிலையில் தினமும் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிஷன் போட நோயாளிகளிடம் ஓ.பி. சீட்டுக்கு தலா ரூ. 50 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. 

அரியலூர் கோவில் பாளையத்தை சேர்ந்த எம். குமார் என்ற இளைஞர் கூறும்போது, கடந்த செவ்வாய்க்கிழமை எனது மாமாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது அங்கிருந்த நர்சு அட்மிஷன் போட்டு அவசர  சிகிச்சைக்கு அனுப்ப ஓ.பி. சீட்டுக்கு ரூ. 50 கேட்டார். 

இதுபற்றி அவரிடம் கேட்டபோது எல்லோருக்கும் இது கட்டாயம் என்றார். அதைதொடர்ந்து ரூ. 50 கொடுத்து சீட்டை பெற்று மாமாவை அட்மிட் செய்தோம். அந்த தொகைக்கு ரெசீது எதுவும் வழங்கப்படவில்லை. இதுபோன்று புறநோயாளிகளிடமும் லஞ்சம் வாங்குவதாக பல நோயாளிகள் தெரிவித்தனர்.
வசதி இல்லாதவர்கள்

தனியார் ஆஸ்பத்திகளுக்கு செல்ல வசதி இல்லாத ஏழை, எளிய மக்களே அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்குவது கண்டிக்க தக்கது. இதில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு லஞ்ச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

அரியலூர் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் கூறும்போது, இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இப்போது அதிகம் பேர் வருகிறார்கள். கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லஞ்சம் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.  
இதுபற்றி ஆஸ்பத்திரி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, இந்த பிரச்சினையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தவறுசெய்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்றனர்.

Similar News