உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நகர பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கும் டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

Published On 2022-03-17 06:01 GMT   |   Update On 2022-03-17 06:01 GMT
மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாக்கும் இந்த டெண்டர் அறிவிப்பை புதுவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பிரெஞ்சு- இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக மாநில மக்களிடம் கருத்து கேட்காமல், புதுவை நகராட்சி ஒரு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நகர பகுதிகளில் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து  வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்க அனுமதித்து, தனியாரிடம் டெண்டர் கோரியுள்ளது. 

இச்செயலை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில்  வன்மையாக கண்டிக்கிறோம். சர்வாதிகார நாட்டில்கூட விதிக்கப்படாத கட்டணத்தை அரசின் ஒப்புதலோடு, புதுவை நகராட்சி விதிக்க  முடிவெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது.  நகராட்சியின் வருமானத்தை பெருக்க ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது கட்டணத்தை  திணித்து அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்காது. 
 
தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட  பல கோடி நகராட்சி இடங்களுக்கான வரி பாக்கி உள்பட நிலுவை வரியை  வசூலிக்க உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஏழை மக்களின் மீது வரியை திணித்து வசூலிக்க நினைப்பது நயவஞ்சக செயல். 
புதுவை சிறிய நகர பகுதி. அடுத்தடுத்த வீதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஒவ்வொரு வீதிக்கும் வாகன நிறுத்த கட்டணம் செலுத்த  முடியுமா? நேரு வீதியில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள் நாள்தோறும் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் அவர்களின் சம்பளமாக என்ன மிஞ்சும்? வீதிக்கு வீதி கட்டணம் வசூலித்தால், புதுவைக்கு சுற்றுலா பயணிகள்  மீண்டும் வருவார்களா? 

மக்களையும், சுற்றுலா பயணிகளையும்  மிகுந்த அவஸ்தைக்கு ஆளாக்கும் இந்த டெண்டர் அறிவிப்பை புதுவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News