உள்ளூர் செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த இளம்பெண்
நாகை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 8 பேரை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் பெருங்கடம்பனூரில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். சங்கமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ராஜன் மகள் தீபா (27).
இவர் மெடிக்கலுக்கு வந்து ராமசந்திரனிடம், தான் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். என்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ராமச்சந்திரன் தனது அண்ணன் சக்திவேல் மகன் சபரிராஜ் என்பவருக்கு வேலை வேண்டி ரூ.3.50 லட்சம் தீபாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நீண்ட நாட்களாக தீபாவிடம் இருந்து அரசு வேலை தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இதற்கிடையே ஏமாந்த மற்றொருவரான காயத்திரி என்பவரும் தீபாவை தேடி வந்தார். இந்நிலையில் தீபாவின் தாயார் மற்றும் சகோதரர் வீட்டை காலி செய்து பொருட்களை வாகனத்தில் ஏற்றுவது தெரிய வந்தது. தகவல் அறிந்த ராமச்சந்திரன் கிராம மக்கள் உதவியோடு பிடித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம் வடலூரில் தீபா பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீபாவை நாகைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராமச்சந்திரன் தவிர மேலும் 7 பேரிடம் ரூ.15 லட்சம் வரை வேலை மோசடியில் ஈடுபட்டதும், பிறரை நம்ப வைப்பதற்காக போலி அடையாள அட்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.