உள்ளூர் செய்திகள்
பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள்
கோடியக்கரை காட்டுப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காடு மற்றும் கோடியக்கரை ஊராட்சி பகுதிகளில் சுமார் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்றும் பசுமைமாறா காடுகள் என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான காட்டுப்பகுதி உள்ளது.
இந்தக் காட்டுப் பகுதியில் பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அருகருகே அமைந்துள்ளது. சரணாலயப் பகுதியில் வெளிமான், புள்ளிமான், முயல், நரி, குரங்கு, மயில், பாம்பு வகைகள், காட்டு பன்றி, குதிரை உள்ளிட்ட சாதுவான மிருகங்களும், பறவைகள் சரணாலயத்தில் சீசன் காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் பறவைகளும் காணப்படும்.
மேலும் காட்டுப்பகுதி ஆரம்பமாகும் ராமர் பாதம் முதல் துவங்கும் காட்டுப்பகுதியில் மூலிகை வனப்பகுதியும் உள்ளது.
இந்த மூலிகை வனத்தில் வயிற்று வலி, சளி, ஜூரம் மூக்கடைப்பு முதல் புற்றுநோய் உள்ளிட்ட பெரும் நோய்களுக்கு தேவையான அனைத்து வகையான மூலிகை மருந்துகள் செடி, கொடி, மரங்களாகவும் வளர்ந்துள்ளது.
இதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக உதவும் ஆவாரம்பூவும் பெருமளவில் உள்ளது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு அரு மருந்தாக உதவும் ஆவாரம் பூ காட்டுப் பகுதி முழுவதும் மட்டுமின்றி சாலைகளின் இருபுறமும் செல்வோர் கண்களை கவரும் வகையில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் போர்வை போர்த்தியது போல ஆவரம் பூ பூத்து குலுங்குகிறது.
இந்த மரத்தின் இலை, பட்டை, பூக்கள், காய் உள்ளிட்டவைகள் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக உதவுமென சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.