உள்ளூர் செய்திகள்
மோசடி

ஜவுளி ரகங்கள் அனுப்புவதாக கூறி இலங்கை ஜவுளி வியாபாரியிடம் ரூ.41 லட்சம் மோசடி

Published On 2022-03-12 12:35 IST   |   Update On 2022-03-12 12:35:00 IST
அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் மற்றும் அவரது தம்பி ஆகியோர் 2 தவணைகளில் வங்கி மூலம் சென்னிமலையில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.41 லட்சம் பணம் அனுப்பி உள்ளனர்.
சென்னிமலை:

இலங்கையை சேர்ந்தவர் அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம். இவர் தமிழ்நாட்டில் இருந்து ஜவுளிகளை கொள்முதல் செய்து இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சென்னிமலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு தங்களுக்கு பல்வேறு ஜவுளி ரகங்கள் தேவைப்படுவதாக ஆர்டர் கொடுத்தார்.

மேலும் அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் மற்றும் அவரது தம்பி ஆகியோர் 2 தவணைகளில் வங்கி மூலம் சென்னிமலையில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.41 லட்சம் பணம் அனுப்பி உள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட ஜவுளி நிறுவனத்தினர் அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீமுக்கு ஜவுளிகளை அனுப்பாமல் இருந்தனர். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

அப்போது அவர்கள் விரைவில் அனுப்புவதாக கூறி காலதாமதம் செய்து வந்தனர். இதையடுத்து அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் ஜவுளி ரகங்கள் அனுப்ப முடியவில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் ஜவுளி நிறுவனத்தினர் ஜவுளி ரகங்களையும் கொடுக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் இருந்து வந்தனர்

இதையடுத்து அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் இ-மெயில் மூலம் ஜவுளி நிறுவனத்தின் மீது புகார் செய்தார். அதன்பேரில் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஜவுளி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News