உள்ளூர் செய்திகள்
கருவேல மரங்களை அகற்றும் பணி

கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

Published On 2022-03-11 15:17 IST   |   Update On 2022-03-11 15:17:00 IST
கோடியக்காட்டில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கோடியக்கரையில் சுமார் 2250 எக்டரில் காடு அமைந்துள்ளது. 

இந்த காடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதில் புள்ளிமான், வெளிமான், முயல், காட்டுபன்றி, நரி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. 

இந்த காட்டில் இயற்கை யாகவே விடத்துவரை, பாலா, நாவல், அரசு, ஆலமரம் பூவரசு, உதியன், புங்கன் போன்ற ஏராளமான மர வகைகள் உள்ளன. 

மேலும் 156 வகையான மூலிகைச் செடிகளும் மற்றும் பல்வேறுபட்ட முள் செடிகளும் வளர்ந்துள்ளன.

இந்த காட்டில் மான்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து புல்வெளியில் மேய்வதற்கு அதிகமான இடங்கள் இருந்தும் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் நரிகள், நாய்கள் போன்ற விலங்குகள் அந்தக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்து மேய வரும் மான்களை வேட்டையாடுகிறது. 

இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் காட்டில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவெடுத்தது. அதன்படி எந்திரங்கள் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 


இந்த கருவேல மரங்களை அகற்றி விட்டால் வனவிலங்குகள் பாதுகாப்பாகவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமலும் சுதந்திரமாக சுற்றித் திரிய வாய்ப்புண்டு. சுற்றுலாப் பயணிகளும் காட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு செல்லும்போது இயற்கையாக சுற்றி திரியும் மான்களை கண்டு ரசிக்க முடியும்.

இதற்கான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் மேற்பார்வை யிட்டு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

Similar News