உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டக்கலை இடு பொருட்கள்
ஆண்டிமடத்தில் மானிய விலையில் தோட்டகலை இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை இடு பொருட்களான பழமரக்கன்றுகள், ஊட்டச்சத்து காய்கறி தோட்ட விதை தொகுப்புகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டக்கலை இடு பொருட்களை வழங்கினார்.
மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வேளாண்மை செய்து நீடித்த நிலையான லாபம் அடையுமாறு விவசாயிகளை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் ராதிகா, துணை வேளாண்மை அலுவலர்கள் பாலுச்சாமி, ராஜேந்திரன் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், இளநிலை ஆராய்ச்சி யாளர் அபிலாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.