உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் கிராமத்தில் நேற்று 5&வது ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது.
இதில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடைத்துறை உதவி இயக்குநர் முரளிசதானந்தம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அனுமதித்தனர்.
காளைகளுக்கு கோ-பூஜை செய்து, வாடி வாசல் வழியாக ஒவ்வொரு காளையாக 125 மீட்டர் தூரம் 2 சுற்றுகள் ஓட விடப்பட்டு, அது எவ்வளவு வேகத்தில் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அதில் எந்த காளை குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த விநாடிகளில் கடக்கிறதோ அந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன்படி முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2வது பரிசாக ரூ.60 ஆயிரம், 3வது பரிசாக ரூ.50 ஆயிரம் என முறையே 50-க்கும் மேற்பட்ட ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
எருது விடும் விழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்திருந்தனர். இதனையொட்டி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில், 50&க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.