உள்ளூர் செய்திகள்
மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.
கடந்த பல மாதங்களுக்குப்பின் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.10 ஆயிரம் கடந்தும், சராசரியான விலை 9,500-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மாநில தலைவர் பி.கே.தெய்வ சிகாமணி கூறியதாவது:&
ஈரோடு பகுதி மஞ்சள் மார்க்கெட்டில் கடந்த பத்து நாட்களாக விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ. 10,500 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9,500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த கட்டுபடியான விலை தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு மஞ்சள் விலை மிகவும் விலை குறைந்து ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து போனது.
அதனால் விவசாயிகள் அதிகமாக மஞ்சளை பயிரிடவில்லை. அதனால் உற்பத்தி குறைந்தது. உற்பத்தி குறைவால் விலை சற்று உயர்ந்து காணப் படுகிறது. இதுவும் பெரிய லாபகரமான விலை இல்லை.
இந்தாண்டு மிகுதியாக மழை பெய்துள்ளது. நீர் வளம் உள்ளது.
இதை பயன்படுத்தி அதிகப் படியான விவசாயிகள் மஞ்சளை பயிர் செய்தால் இந்த விலை குறைப்பது சாத்தியமாகாது என நினைக்கிறோம்.
எதிர்காலத்தில் இந்த விலை தொடர நடப்பு பருவத்தில் விவசாயிகள் எவ்வளவு பரப்பில் மஞ்சளை சாகுபடி செய்துள் ளார்களோ அதே அளவே மஞ்சளை பயிரிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதைவிட கூடுதல் பரப்பில் சாகுபடி செய்தால் விலை வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகும்.
மஞ்சள் பயிர் செய்த நிலத்தில் அடுத்தாண்டு மஞ்சளை பயிரிட முடியாது. நிலத்தை மாற்றி மாற்றி பயிர் செய்யும் பயிராக மஞ்சள் உள்ளதால் அதற்கேற்ப மாவட்ட நிர்வாகம் மூலம் திட்டமிட்டு, அதிகப் படியான பரப்பில் மஞ்சளை பயிரிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.