உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அரியலூரில் எஸ்.ஐ. உட்பட 2 பெண் போலீசார் தற்கொலை முயற்சி

Published On 2022-03-10 15:19 IST   |   Update On 2022-03-10 15:19:00 IST
அரியலூரில் எஸ்.ஐ.உட்பட 2 பெண் போலீசார் தற்கொலை முயற்சியால் பரபரப்பு
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கூவாகம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பிரியங்கா (வயது 28). இவர் அரியலூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில்  திடீரென  குளிர்பானத்தில் எரிமருந்து கலந்து குடித்தார்.  பின்னர் அவரே இருசக்கர வாகனத்தில் போய் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

இதுபற்றி அறிந்த அவரின் உறவினர்கள் அங்கிருந்து அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார்    ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி  உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த பிரியங்கா டிபன் சாப்பிடுவதாக கூறிச்சென்றார். பின்னர் விஷம் அருந்தியதாகவும், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்  எனவும்  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு  குடும்ப பிரச்சினை இருப்பதாவும் கூறினர்.

இந்த நிலையில் அரியலூர் போலீஸ்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த லட்சுமி பிரியா (32)  என்பவரும் திடீரென பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தகவல் வெளி யாகி யுள்ளது. அரியலூர் ராஜூ நகர் பகுதியில் கணவர் சக்தி முருகனுடன் வசித்து வந்த  லட்சுமி  பிரியா வீட்டில் பூச்சிக்கொல்லி      மருந்தை சாப்பிட்டு விட்டு   டூட்டிக்கு காவல் நிலையத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.

பின்னர் மயங்கி விழுந்த அவரை சக காவலர்கள் மீட்டு  திருச்சியில்  பெண் காவலரை சேர்த்துள்ள அதே ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு  முயன்ற சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் அரியலூர் ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக உள்ளார். ஒரு குழந்தை உள்ளது. இவரது தற்கொலை முயற்சிக்கு  உறுதியான காரணம் தெரியவில்லை. பணிச்சுமை காரணமாக  தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்  என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெண் போலீசை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இருவேறு சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News