உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் கண்மாயை சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் சுமார் 40கண்மாய்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் பெய்யும் மழைநீர் 40கண்மாய்களுக்கும் வருகிறது. கண்மாய் தண்ணீர் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
வத்ராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட வில்வராயன்குளம் கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால் விவ சாயப்பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்து 20-21ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணி ரூ. 47லட்சத்திற்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கண்மாய்கரையில் பராமரிப்புபணி பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றதாகவும், கண்மாயை ஆழப்படுத்த வில்லை. முட்புதர்களை அகற்றவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரும் தண்ணீர் முட்புதர்களால் சேமிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாகவும், இந்த கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வத்திராயிருப்பு வில்வராயன்குளம் கண்மாயில் செய்யப்பட்ட ரூ.47 லட்சத்திற்கான குடிமராமத்துபணி குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்மாய் முழுவதும் முளைத்திருக்கும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.