உள்ளூர் செய்திகள்
அரியலூர் அருகே கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி
அரியலூர் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகளத்தூர் கிராமத்திலுள்ள பெரியாண்டவர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முன்னதாக பெரியாண்டவர், பெரியநாயகி சாமிகளுக்கு பன்னீர், சந்தனம் இளநீர், கபம், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து நிசானி உடல் கிழித்து குடலை பிடுங்கி வல்லாலக்கோட்டை இடித்து வீதியுலா புறப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், ரத்த காட்டேரி போன்று வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று சிறுகளத்தூர் அருகே உள்ள மயானத்தை அடைந்தனர்.
அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் பொன்பரப்பி, பெரியாக்குறிச்சி, கொடுக்கூர், மருவத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.