உள்ளூர் செய்திகள்
.

ஓசூரில் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் கைதான 16 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் சிறையில் அடைப்பு

Published On 2022-03-07 15:39 IST   |   Update On 2022-03-07 15:39:00 IST
ஓசூரில் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் கைதான 16 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஓசூர்:

ஓசூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஓட்டலில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை குத்திக் கொலை செய்து, ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த 17,000 ரூபாயை திருடி சென்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது60). இவர், ஓசூர் ஆவலபள்ளி பகுதியில் அவரது மகள் செல்வி என்பவரது வீட்டில் வசித்து வந்தார். மேலும், ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு  ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த மாதம் 26&ந்தேதி, வழக்கம் போல், ஹோட்டலுக்கு பணிக்கு வந்த தாமோதரன் இரவு 11 மணிக்கு பணி முடிந்த பின்ப ஓட்டலுக்கு உள்ளே தூங்கினார்.  அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியை சேர்ந்த அப்ரீத் (எ) சகுத்தன், (23,)தோசிப் என்ற தீபு (21) மற்றும், 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார்  கைது செய்தனர். இதையடுத்து கைதான அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அப்ரித், தோசிப் ஆகியோரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், 16 வயது சிறுவனை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

Similar News