உள்ளூர் செய்திகள்
நீச்சல் தெரியாமல் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
டி.என்.பாளையம்:
நீச்சல் தெரியாமல் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
திருப்பூர் மாவட்டம் சேவூர் மங்கரசுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் இளங்கோ (19). தனியார் பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று சாமிநாதன் தனது குடும்பத்துடன் டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டப்பன்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாக்காக சென்றனர்.
பின்னர் திருவிழா முடிந்து இளங்கோ உறவினர்களுடன் கொடிவேரி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றார்.
பின்னர் இளங்கோ மற்றும் உடன் வந்த உறவினர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது இளங்கோ ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கினார்.
உடனே உறவினர்கள் இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொடிவேரி ஆற்றில் மூழ்கிய இளங்கோவை பிணமாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.