உள்ளூர் செய்திகள்
மத்திய மந்திரி எல்.முருகன்

உக்ரைனில் இருந்து கடைசி மாணவரை அழைத்து வரும் வரை மீட்பு பணி தொடரும்- மத்திய மந்திரி தகவல்

Published On 2022-03-06 12:41 IST   |   Update On 2022-03-06 12:41:00 IST
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பவர்கள் எத்தனை பேர்? என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.

சென்னை:

சென்னை சவுகார்பேட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மந்திரி எல்.முருகன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதையும் சேர்ந்த மாணவர்களையும், பொது மக்களையும் மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தினமும் 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை தாய் நாட்டுக்கு வந்து சொந்த மாநிலம், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே செய்து வருகிறது.

ஆனால் இந்த நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நோக்கம் மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவதுதான். அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அதன்படி செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள கடைசி மாணவரை மீட்டு அழைத்து வரும் வரை மீட்புப்பணி தொடரும்.

மத்திய அரசு மிக தீவிரமாக மீட்புப்பணிகளை செய்து வரும் போது மாநில அரசு தனியாக குழுவை அமைத்துள்ளது என்கிறீர்கள்.

அவர்கள் எத்தனை பேரை அழைத்து வந்துள்ளார்கள்? நீட் தேர்வு காரணமாகத்தான் மாணவர்கள் அதிகளவில் உக்ரைனுக்கு சென்று படித்து வருவதாக கூறுவதும் தவறு.

ஏனெனில் எல்லா படிப்புகளுக்கும், வேலைகளுக்கும் கூட தகுதி தேர்வு என்று ஒன்று இருக்கும். அதில் தகுதியும் பெற வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பவர்கள் எத்தனை பேர்? என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்- வைகோ அறிக்கை

Similar News