உள்ளூர் செய்திகள்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா
வீட்டிற்கு செல்ல நடைபாதை வேண்டி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் தாலுக்கா, தேவூர் கிராமத்தில் சுரேஷ்&அமுதா தம்பதியினர் தனது 2 குழந்தைகளோடு வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனிடையே, அப்பகுதியில் வசிக்கும் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அவருடைய உறவினர்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தங்களுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் சுரேஷ் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையம், அறநிலையத் துறை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்து வந்துள்ளனர்.
ஆனால், புகார்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செந்தமிழ்செல்வி, நேற்று காலை அதே பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை ஆக்கிரமித்து கொட்டகை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து, அக்குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். பின்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்ட கலெக்டர், சம்மந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.