உள்ளூர் செய்திகள்
சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி
நாகையில் சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலியானார்
நாகப்பட்டினம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியை சேர்ந்த ராமஜெயம் என்பவரது மகன் அருள்மொழி (வயது 35). அறுவடை எந்திர டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் நாகை, திட்டச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அருள்மொழி, தனது மோட்டார் சைக்கிளில் புத்தூர் ரவுண்டானாவில் இருந்து திட்டச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
பாலையூர் அருகே எதிரே காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள், அருள்மொழி மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில் சாராய மூட்டைகளுடன் வந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. சாராயம் கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில், படுகாயம் அடைந்த அருள்மொழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருள்மொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்தி வந்து விபத்தை ஏற்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.