உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் வெவ்வேறு விபத்தில் இளம்பெண், உரக்கடை மேலாளர் பலியானார்கள்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சட்டிக்கிணறு என்ற திருவேங்கடபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி (வயது65). இவர் ராஜபாளையத்தில் உள்ள வேட்டை வெங்கடேஷபெருமாள் கோவிலில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணவிழாவில் மகள் வெங்கடேஷ்வரியுடன் கலந்துவிட்டு நேற்று மதியம் மொபெட்டில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
சத்திரபட்டி ரோடு சமுசிகாபுரம் ஊரணி பஸ்ஸ்டாப் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் மொபட்டில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ்வரி தலையின் பின்பகுதியில் அடிபட்டு மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதிராஷ்டவசமாக பெருமாள்சாமி உயிர் தப்பினார்.
இது குறித்து பெருமாள்சாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வடக்கு தேவதானத்தை சேர்ந்த அரசுபஸ் டிரைவர் வரதராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (49). ராஜபாளையத்தில் உள்ள உரக்கடையில் மேனேஜராக வேலை பார்த்து வரும் அவர் வழக்கம் போல கடைக்கு செல்வதற்காக அதே ஊரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
ராஜபாளையம்-தென்காசி ரோடு ஓட்டல் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. இதில் பின்புறம் உட்கார்ந்திருந்த கோபாலகிருஷ்ணன் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்.
தகவல் கிடைத்தவுடன் தெற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்கை அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.