உள்ளூர் செய்திகள்
அரியலூரில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சம்
அரியலூரில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில உறவினர் போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் ராசாங்கம் (வயது 50) இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் அவரது வீட்டிற்கு, உறவினர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டு குடித்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் வீட்டில் நடைபெற்ற விசேஷங்களுக்கு வர முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த மர்ம நபர், ராசாங்கத்தின் வீட்டின் தோட்டத்தில் இருக்கும் சில மூலிகைகளின் பெயர்களை சொல்லி அவற்றை, தனக்கு சிறிது பறித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து ராசாங்கம் தோட்டத்திற்கு சென்று அவர் கேட்ட மூலிகைகளைப் பறித்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மர்ம நபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சந்தேகம் அடைந்த ராசாங்கம், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10.5 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல் காரைக்குறிச்சி பட்டத்தெருவில் கண்ணாயிரம்(30) என்பவரது வீட்டில் ரூ.26 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை மற்றும் திருட்டு போன சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் சமீபகாலமாக இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறதால், உறவினர் வீட்டு விஷேசங்களுக்காக வெளியூர் செல்வதற்கே அச்சமாக உள்ளது. போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.
போலீசார் கூறுகையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றோம். சந்தேகப்படும்படியாக யாராவது தென்பட்டால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.