பயிர் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து விதைச்சான்று அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஊராட்சிக் கோட்டை பகுதியில் மதலைமுத்து என்பவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகமான சி.ஓ. (ஆர்) 15 ராகி ஆதாரநிலை விதைப்பண்ணை அமைத்துள்ளார்.
இந்த ரகமானது 120-125 நாட்களில் அறுவடைக்கு வரும். பயிர் சாயாத தன்மை கொண்டது. மணிகள் உதிராத தன்மை உடையது. புரதச்சத்து 11.8 சதவீதம் கொண்டது. ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 2300 கிலோ மானா வாரியிலும், 2800 கிலோ இறவையிலும் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்விதைப் பண்ணையை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், உதவி விதை அலுவலர்களுக்கு சிறுதானிய பயிரில் வயலாய்வு மேற்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் கலவன்கள் கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார்.
மேலும் சாகுபடி யாளருக்கு பயிர் உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி உடனிருந்தார்.