உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தி கோவிலில் நடந்த கோபாலகிருஷ்ண பாரதி இசை விழா முடிவடைந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் வள்ளலார் கோயில் எனப்படும் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் நடைபெற்றுவந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34&வது ஆண்டு இசை விழா நிறைவடைந்தது.
மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் பிறந்தவரான கோபாலகிருஷ்ண பாரதி சிவனை மட்டுமே பாடியவர். பன்மொழிப் புலவர்களுடன் தொடர்புகொண்டு, அந்தந்த மொழி இசையையும் கற்ற இவர், மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை சந்திக்க திருவையாறு சென்ற இடத்தில் ‘சபாபதிக்கு வேறு தெய்வம்“ என்ற பாடலை இயற்றியுள்ளார். இவர் 1896&ம் ஆண்டு தமது 86&வது வயதில் சிவராத்திரியன்று சிவபதம் எய்தினார்.
இவரது நினைவைப் போற்றும் வகையில் மயிலாடுதுறையில் கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் இசை விழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசை பாடகி சவுமியாவின் இசை ஆராதனை நடைபெற்றது. இதில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம்“ எனத் தொடங்கும் கீர்த்தனை உள்ளிட்ட கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய பல்வேறு பாடல்களை மனமுருக பாடினார்.
மேலும், திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன், பாண்டமங்கலம் பி.ஜி.யுவராஜ் குழுவினரின் நாதஸ்வரம், ரித்விக் ராஜாவின் இன்னிசை பாடல் நிகழ்ச்சி ஆகியனவும் நடைபெற்றது. இதில், ஏராளமான இசை ரசிகர்கள் கலந்துகொண்டு இன்னிசையை கேட்டு ரசித்தனர்.