உள்ளூர் செய்திகள்
பூச்சித்தாக்குதலால் தொடர் நஷ்டம்: மாமரங்களை வெட்டிய போச்சம்பள்ளி விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பூச்சி தாக்குதலால் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மா மரங்களை விவசாயி அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி மாரிசெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவண பெருமாள் (வயது 45),விவசாயி.
இவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது 3 ஏக்கர் நிலத்தில் மா விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் மாமரங்களில் அதிகளவு பூக்கள் பிடித்தன. அதிக மகசூல் கிடைக்கவும், பூக்கள் உதிராமல் இருக்கவும், பூச்சி மருந்து அடித்து ஒரு மாதம் ஆன நிலையில் பூக்கள் கருகின. மேலும் வெறும் மாமரம் மட்டுமே இருந்ததால் சரவண பெருமாள் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் வேதனையில் இருந்து வந்த அவர், தனது தோப்பில் இருந்து மாமரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்று வருகிறார்
இதுகுறித்து விவசாயி சரவண பெருமாள் கூறியதாவது:
கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டரிடம் மா விவசாயிகள் சார்பில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அதேபோல் பையூர் வேளாண்மை மைய அதிகாரிகள், இந்த பகுதிக்கு வந்து மாமரத்துக்கு என்ன மருந்து பயன்படுத்த வேண்டும் என்று இதுவரை ஆய்வு செய்யாமல் இருந்து வருகிறார்கள். இனி மா விவசாயத்தை நம்பி எந்த பலனும் இல்லை.
மேலும் மா விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் விரக்தியில் தோப்பில் இருந்து அனைத்து மாமரங்களையும் வெட்டி விற்று விட்டேன். இனி மாற்று விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.